புதுச்சேரியில் நடைபெற்ற பிரகதி பாத யாத்திரையில் பயணம் செய்தார் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்.

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12 ஆண்டுகள் மத்திய அரசை வழிநடத்தி வரும் சாதனையைப் பெருமைப்படுத்தும் விதமாக, மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ‘பிரகதி பாத யாத்திரை’ இன்று புதுச்சேரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த யாத்திரை மூலம் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் கொண்டிருந்தது.

பாண்சியோனா பிராஞ்ச் பள்ளியில் காலையில் தொடங்கிய இந்த பாதயாத்திரையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

யாத்திரையின் ஒரு பகுதியாக துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோர் பேருந்து மூலம் புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்தனர். பாரம்பரிய மற்றும் இயற்கை அழகு நிறைந்த இடங்களான புதுச்சேரி மேரி தேவாலயம், மகாத்மா காந்தி சிலை, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீடு உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அங்குள்ள வரலாற்றுச் சிறப்புகளை ரசித்தனர். இந்த இடங்கள் புதுச்சேரியின் பிரெஞ்சு காலனித்துவ பாரம்பரியத்தையும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் ஒருங்கிணைத்து காட்சியளித்தன.

யாத்திரை இறுதியாக தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது. அங்கு பங்கேற்றவர்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரியின் அழகிய நகர்ப்பகுதிகளில் யாத்திரை செல்லும் போது, சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வரவேற்றதோடு, பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு உணர்வை ஊக்குவிப்பதோடு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் அரசின் முயற்சியாகவும் அமைந்தது. பிரதமர் மோடியின் 12 ஆண்டு பதவிக் காலத்தில் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள வளர்ச்சிப் பணிகளை இந்த யாத்திரை மூலம் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version