நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, கடந்த ஜூலை 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் மேற்கொண்ட அடக்குமுறையை கடுமையாக விமர்சித்தார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“இந்த நடவடிக்கைக்கு அமித் ஷா நேரடியாக உத்தரவிட்டிருந்தால் அது மிகப்பெரிய தவறு. அவர் உத்தரவிடவில்லை என்றால், தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது கூட தெரியாத திறமையற்ற அமைச்சராக இருக்கிறார். எந்த வகையிலும் அவர் பதவியில் தொடரக்கூடாது,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டதாகவும், அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், போராட்டத்தின் போது சாதாரண உடையில் இருந்த சிலர் யார் என்ற கேள்வியையும் எழுப்பிய ராகுல் காந்தி, அவர்கள் போலீசாரா அல்லது வேறு யாரா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே உரையைத் தொடரலாம் என கூறப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், “பா.ஜ.க. அல்லது ஆர்.எஸ்.எஸ்.-இடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026-ஐ விமர்சித்த ராகுல் காந்தி, அது வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டம் அல்ல; குற்றவாளிகளைத் தண்டிக்கும் சட்டம் மட்டுமே எனக் கூறினார். உண்மையான வினாத்தாள் கசிவைத் தடுக்க தேவையான கட்டமைப்பு மாற்றங்களே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version