இந்திய ரயில்வே நிர்வாகம், Rail One செயலி மூலம் புக் செய்யப்படும் முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்டுகள் தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதையும், போலி டிக்கெட் மோசடிகளையும் தடுக்கும் வகையில் இந்தப் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தபடி, Rail One செயலி வழியாக அன்-ரிசர்வ்டு டிக்கெட் எடுக்கும் பயணிகள், பயணத்தின்போது தங்கள் மொபைலில் செயலியை நேரடியாகத் திறந்து ‘Show Ticket’ விருப்பத்தை டிடிஇ-க்கு காண்பிக்க வேண்டும். இதுவே ஒரே செல்லுபடியான முறையாகும்.

எவை ஏற்கப்படாது?

டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF கோப்பு, வாட்ஸ்அப் அல்லது பிற செயலிகள் வழியாக பகிரப்படும் பார்வேர்டு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ஆகியவை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகைய முயற்சிகள் டிக்கெட் இல்லாத பயணமாகக் கருதப்பட்டு, ரயில்வே சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், சமீப காலமாக அதிகரித்து வரும் முறைகேடுகள்தான்.

ஒரே டிக்கெட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பல பயணிகளிடையே பகிர்ந்து கொண்டு, ஒரே கட்டணத்தில் பலர் பயணம் செய்யும் சம்பவங்கள் பெருகியுள்ளன. இதனால் நேர்மையான பயணிகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மேலும், சாதாரண லோக்கல் மற்றும் சபர்பன் ரயில்களுக்கான Rail One டிக்கெட்டுகள், புக் செய்த நேரத்திலிருந்து 2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின் டிக்கெட் தானாகவே செல்லாது.

எனவே, முன்கூட்டியே அதிக நேரத்துக்கு முன் டிக்கெட் எடுப்பதை பயணிகள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில் நிலையங்களில் இணைய சேவை மற்றும் மொபைல் சிக்னல் குறைபாடுகள் அடிக்கடி ஏற்படுவதால், பயணிகள் டிக்கெட் எடுத்த உடனேயே ‘Show Ticket’ பக்கத்தை சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

சிக்னல் இல்லாத பகுதிகளில் முன்னதாகவே டிக்கெட்டை ஆஃப்லைன் மோடில் தயாராக வைத்திருப்பது நல்லது. இந்தப் புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் இவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றினால், பயணம் சுமுகமாகவும், முறைகேடுகள் இன்றியும் இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version