திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 5 மாணவிகள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மாணவிகள், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வரும் நிலையில், 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான சிறப்பு வகுப்புகள் முடிந்து திரும்ப போதிய பேருந்து வசதி இல்லாததால், அவர்கள் ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்தத் தேவையைப் பயன்படுத்தி, சில ஆட்டோ ஓட்டுநர்கள் விதிகளை மீறி அதிகப்படியான மாணவிகளை ஏற்றிச் செல்வதே தொடர் விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி நேரங்களுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமெனவும், அரசு இச்சம்பவத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளை நேரில் சந்தித்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் வேலு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version