இந்திய கடற்படை என்பது போர் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடும் படை மட்டு அல்ல, அது  நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வலுவான காவலனாகவும் திகழ்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய அவர், “அண்மைய நிகழ்வுகள், எந்த ஒரு நாட்டிற்கும் திறமையான மற்றும் உடனடியாக செயல்படும் கடற்படை எவ்வளவு அவசியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன” என்றார்.

மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கிய பிறகு, ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்‌ஷா’ நடவடிக்கையின் மூலம் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பாக வழிகாட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

“இதன் மூலம் இந்திய கடற்படை ஒரு போர் படையாக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான பாதுகாவலராகவும் உருவெடுத்துள்ளது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ‘மஹா சாகர்’ (MAHA SAGAR – Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற தொலைநோக்கு பார்வையை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். அந்தப் பகுதியில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்” என்று அவர் கூறினார்.

மேலும், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது மனிதாபிமான உதவிகள், கடல் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களை பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய கடற்படை முதலில் களமிறங்கும் நம்பகமான படையாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

 பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருவதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், “உள்நாட்டிலேயே ஒரு போர்க்கப்பலை உருவாக்குவது என்பது ஒரு புதிய போர் தளத்தை உருவாக்குவது மட்டுமல்ல; அதன்மூலம் நமது வடிவமைப்புத் திறன், தொழில்நுட்ப வலிமை மற்றும் திறமையான மனிதவளமும் மேம்படுகின்றன” என்று தெரிவித்தார்.

போர்க்கப்பல் கட்டுமானம் என்பது ஒரு கப்பலை உருவாக்குவது மட்டுமல்ல; அதைச் சுற்றியுள்ள முழுமையான தொழில்துறை சூழலையும் உருவாக்குகிறது என்றும், எதிர்காலத்தில் இந்தியாவை உலகின் முன்னணி கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப மையமாக மாற்றுவதே அரசின் இலக்கு என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version