வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள காலியாக உள்ள 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் 2 இடங்களுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, கல்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை மொத்தம் 18. ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இதில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆறு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். அந்தவகையில் இந்த முறை 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகிற ஜுலை 15-ந் தேதியோடு நிறைவு பெறுகிறது. திமுகவின் வில்சன், எம்.எம்.அப்துல்ல, சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாளை அதாவது ஜுன் 2-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள். அதன்பிறகு பரிசீலனை. 6 பேருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டால் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும். இல்லையெனில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இதன்படி திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மநீம-வின் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர். அதிமுக சார்பில் வேட்பாளர்கள் யார் என்பதில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. பாமகவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அதிமுக தலைமை விரும்பவில்லை. தேமுதிக தனக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் 2026 -ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் இடம் வழங்கப்படும் என்று அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் எஞ்சிய 2 இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுவது என்று முடிவானது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, கல்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் ஆறு பேரின் பெயர்களும் வெளியாகி விட்டது. அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டியது தான் பாக்கி. வருகிற 19-ந் தேதி இவர்கள் எம்.பி.யாக அறிவிக்கப்படுவார்கள்.