பாமக தலைவர் ராமதாசை, தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து பாஜக பிரமுகரும் ஆடிட்டருமான குருமூர்த்தியும், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் 3 மணிநேரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக தலைவர் ராமதாசுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் பேரன் முகுந்தனை, இளைஞர் அணி தலைவர் பதவியில் நியமித்தார் ராமதாஸ். இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து தான் பனையூரில் புதிய அலுவலகம் திறந்துள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பாமகவில் தலைவர் பதவியை தானே தொடர உள்ளதாகவும், அன்புமணி செயல்தலைவராக பொறுப்பு வகிப்பார் என்றும் தடாலடியாக அறிவித்தார். கடந்த மே மாதம் 11-ந் தேதி மாமல்லபுரம் அருகே நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் மேடையிலேயே அன்புமணியை விமர்சிக்கும் வகையில் பேசினார் ராமதாஸ்.
இதனைத்தொடர்ந்து ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்தனர். இதனால் மனம் நொந்துபோன ராமதாஸ், அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கத் தொடங்கினார். பதிலுக்கு அவர்களுக்கு மறுநியமன கடிதத்தை அன்புமணி வழங்க ஆரம்பித்தார்.
இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த ராமதாஸ் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, அன்புமணியை 35 வயதிலே மத்திய அமைச்சராக்கியது தான்செய்த தவறு என்றார். அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் காலில் விழுந்து கதறியதால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாமல் போய்விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு அன்புமணி பதிலேதும் தெரிவிக்கவில்லை, ஆனால் தாயின் மீது பாட்டிலை வீசி எறிந்ததாக கூறிய குற்றச்சாட்டை மட்டும் மறுத்தார்.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாசின் வீட்டிற்கு அன்புமணி ராமதாஸ் இன்றுகாலை சென்றார். சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்காமல் வணக்கம் வைத்து விட்டு புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்திலேயே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வருகை தந்தனர். ஏறத்தாழ 3 மணிநேரம் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் செய்து வைக்க வந்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ராமதாஸ் தன்னுடைய நீண்டகால நண்பர் என்பதால் பார்க்க வந்ததாக குருமூர்த்தி மழுப்பலாக பதிலளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார். அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தக்க வைக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.