கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். திடீரென தனது பிரிவு முடிவை அவர் வெளிப்படையாக பொதுவெளியில் கூற, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக ஆர்த்தி கூறியிருந்தார்.
ஆர்த்தி தன்னை மரியாதை குறைவாக நடத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை ரவி முன்வைத்திருந்தார். மேலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்தார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமண விழாவில், மனநல மருத்துவரும், பாடகருமான கெனிஷாவுடன் ஜோடியாக கலந்து கொண்டார் ரவிமோகன். அதன்பின் ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஆர்த்தி. புதிதாக வந்தவர்களுக்காக இத்தனை வருட வாழ்க்கை ரவிக்கு கசந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஆர்த்தியின் தாயார் தன் மீது கடன் சுமையை சுமத்தியதாகவும், ஆர்த்தியின் கட்டுக்கடங்காத செலவு தனக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்ததாகவும் கெனிஷா தனது அழகான துணை எனவும் கூறியிருந்தார் ரவி மோகன். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரவி மோகன் விவகாரத்து கோரி வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, விவாகரத்து அளிக்க வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என நடிகர் ரவிமோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்த்தி தரப்பில், மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும் கோரியுடன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
