மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) அமைப்பிலிருந்து முன்னணி நடிகைகளான ரேவதி மற்றும் பத்மபிரியா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளனர். இருவரும் தங்கள் முடிவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட கூட்டறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு அம்மா அமைப்பைச் சுற்றி எழுந்துள்ள தொடர் சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா அமைப்பு, மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர், நடிகைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும், தொழில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் இதன் தலைமையில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பு பல்வேறு புகார்கள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக, 2024-ம் ஆண்டு வெளியான ஜஸ்டிஸ் ஹேமா தலைமையிலான கமிட்டி அறிக்கை, மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், சமத்துவமின்மை உள்ளிட்ட பல கடுமையான விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அம்மாவின் நிர்வாகக் குழு ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்பட்டன.
ரேவதி மற்றும் பத்மபிரியா தங்கள் கூட்டறிக்கையில், “இதை வெறும் மற்றொரு சர்ச்சையாகப் பார்க்கக் கூடாது. எங்கள் முடிவு அவசரத்தில் எடுக்கப்பட்டதோ, தனிப்பட்ட சம்பவத்தால் உந்தப்பட்டதோ அல்ல” என்று தெளிவுபடுத்தியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியம், பொறுப்புக்கூறல் மற்றும் சமமான அணுகுமுறை ஆகியவற்றை வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் அதற்கு பதிலாக மௌனமும் புறக்கணிப்பும் மட்டுமே கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடியும், எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.
ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பின் சிலர் ராஜினாமா செய்தது கொள்கை அடிப்படையிலானது அல்ல என்றும், பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். “அதிகார அமைப்புகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள புதிய வழிகளை உருவாக்குகின்றன. முகங்கள் மாறினாலும், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் கட்டமைப்புகள் மாறவில்லை” என்று சாடியுள்ளனர். அனைத்து நடிகர்களின் கூட்டுக் குரலாக இருக்க வேண்டிய அம்மா, ஆணாதிக்கம் மற்றும் அதிகார அரசியலால் தன் அடிப்படை நோக்கத்தை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
“எங்கள் வெளியேற்றம் தோல்வி அல்ல; அது எங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்கும் முடிவு. சமத்துவமான மலையாள திரைப்படத் துறைக்கான பயணம் தொடரும்” என்று அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ள இருவரும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த விலகல், பெண் கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் சம உரிமைக்கான குரலை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
