சின்ன திரையில் பிரபலமாகி சினிமாவிலும் தடம் பதித்த ரோபோ சங்கர், தனது தனித்துவமான காமெடியால் உச்சம் தொட்டவர். அவரது திடீர் மரணம், திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ரோபோ சங்கர், அந்த மண்ணுக்கே உரிய கலைஞனாக மேடையேறத் தொடங்கினார். ஒருபக்கம் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், இன்னொரு பக்கம் ரியல் ரோபோவாக ஆட்டம் போட்டு அசரடித்தார். கலைஞனாக மட்டுமல்லாமல் கமல்ஹாசனின் தீவிர ரசிகனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ரோபோ சங்கருக்கு ரொம்பவே ஆர்வம். இதுவே ரோபோ சங்கரை மிமிக்ரி கலைஞனாக உருமாற்றியது.
ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தபோது, கமல், சிவாஜி ஆகியோரைப் போல மிக தத்ரூபமாக மிமிக்ரி செய்து கவனம் ஈர்த்துள்ளார். இதனால் ரோபோ சங்கருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, அப்படியே ரோபோ அவதாரமும் எடுக்கத் தொடங்கினார். 1990-களில் மேடை கலை நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டிருந்தன. இதனால் அப்போது போட்டியும் அதிகமாக காணப்பட்டது, ஒவ்வொரு கலைஞர்களும் தங்களை தக்க வைத்துக்கொள்ள பல புதிய முயற்சிகளில் களமிறங்கினர். அப்படித்தான் தன்னைத்தானே ரோபோவாக செதுக்கிக் கொண்டார்.
அப்போதெல்லாம் ரோபோ என்றால் எப்படி இருக்கும் என பலருக்கும் தெரியாது. ஆனாலும் மேடையில் மிக எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். அதாவது ரோபோ போல மேடையில் தோன்ற வேண்டும் என்றால், தனது உடல் முழுக்க சில்வர் பெயிண்ட் பூசிக்கொள்ள வேண்டும். அந்த பெயிண்ட்டை பூசிக்கொள்ளவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகுமாம். அதேபோல் நிகழ்ச்சி முடிந்ததும், அதனை கலைப்பதற்கும் அதிக நேரம் எடுக்குமாம். அதோடு சில்வர் பெயிண்டை உடலில் இருந்து அகற்ற, மண்ணெண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதேபோல், சில்வர் பெயிண்ட் பூசினாலும் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் ரோபோவாக மாற முடியும் என, ஜிம்மில் அதிகமாக ஒர்க் அவுட் செய்துள்ளார்.
ஒருமுறை சேலம் அருகிலுள்ள கிராமத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்கவிருந்த பிரபலம் ஒருவர், நிகழ்ச்சிக்கு வர கொஞ்சம் தாமதம் ஆகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் சென்றுள்ளது. அதுவரை மக்கள் கூட்டத்தை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என முடிவு செய்த அவர்கள், ரோபோ சங்கரிடம் உதவி கேட்டுள்ளனர். அந்நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் ரோபோ சங்கரின் ரோபோ டான்ஸ் அரங்கேறியுள்ளது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அந்த பிரபலம் வரும் வரை மீண்டும் அவரையே மேடையேற்ற முடிவு செய்துள்ளனர். ஆனால், அதற்குள் அவர் தனது மேக்கப்பை கலைத்துவிட்டு ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் நிலைமையை எடுத்துச் சொன்னதும், “ஆடுறது ஒன்னும் பிரச்சனை இல்லண்ணே… ஆனா இந்த மேக்கப்பை திரும்பப் போட ஒரு மணி நேரம் ஆகும்” எனக் கூறியுள்ளார்.
ஆனாலும் மேக்கப் போடாமல் மேடையேறிய ரோபோ சங்கர், ரோபோவுக்கு காதல் வந்தா எப்படி இருக்கும் என நடித்துக் காட்ட, மொத்த கூட்டமும் அங்கேயே அமர்ந்திருந்துள்ளது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னைத்தானே மெல்ல மெல்ல செதுக்கிக்கொண்ட சங்கர், இப்படிதான் ‘ரோபோ’ சங்கராக விஸ்வரூபம் எடுத்துள்ளார். எந்திரமான ரோபோக்கள் எப்படி காலத்துக்கும் அதன் அசல் தன்மையுடன் நிலைத்திருக்குமோ, அப்படியே ரோபோ சங்கரின் காமெடிகளும் அவரது பண்புகளும் ரசிகர்கள் மத்தியில் என்றும் மறவாதிருக்கும்.