டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியும், பாஜக முன்னாள் அறிவுசார் பிரிவு தலைவருமான டி.ஜி. மோகன்தாஸ் வெளியிட்டுள்ள கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி டி.ஜி. மோகன்தாஸ் தனது கருத்துகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜூலை 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட காணொளியில், ” போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் நான் மட்டும் இருந்திருந்தால் அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பேன். மூன்று முறை கலைந்து செல்லுமாறு எச்சரித்த பிறகும் மக்கள் செல்லவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டிருப்பேன். சிலர் உயிரிழப்பார்கள், சிலர் காயமடைவார்கள். நான்கு மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கும்” என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் குறித்தும் இழிவு
மேலும், மற்றொரு காணொளியில், போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. “பாலியல் பலாத்காரங்கள் நடக்கும்… கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் நடக்கும்… பாலியல் பலாத்காரத்தை விரும்பும் பெண்களும் இருக்கிறார்கள்… பாலியல் பலாத்காரத்தை விரும்பும் மனிதர்களும் இருக்கிறார்கள்; குறிப்பாக இடதுசாரிகள், மதச்சார்பின்மைவாதிகள், ஜனநாயகவாதிகள், பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்… இதில் யாராவது உயிரிழந்தால் அவர்களுக்கு ஒரு ‘தியாகி’ கிடைத்துவிடுவார்… கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் நடந்தாலும், அவர்கள் அதுகுறித்து எந்தப் புகாரும் அளிக்க மாட்டார்கள்; ஏனெனில் பாலியல் பலாத்காரத்தை விரும்புபவர்கள் இவர்கள்தான்,” என்று மோகன்தாஸ் அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.
அதேபோல், ஜூலை 24-ஆம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு காணொளியில், மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, போராட்டக்காரர்களை தாக்குவதற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கேரளாவில் அரசியல் விமர்சகராகவும், யூடியூப் தளங்களில் செல்வாக்கு கொண்டவராகவும் அறியப்படும் டி.ஜி. மோகன்தாஸின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சு வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டிய பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகள், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
