நடைபெற்று முடிந்த தமிழக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக தான் போட்டியிட்ட 169 இடங்களில் 47 தொகுதிகளையே கைப்பற்றி மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனால் எதிர்க்கட்சியாகக் கூட தொடரமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்டதால் அதிமுக, தவெகவுக்கு ஆதரவளித்து ஆட்சியில் பங்கு வகிக்கலாம் என சி.வி.சண்முகமும், ஆதரவு மட்டும் அளிக்கலாம் என தங்கமணியும், ஆதரவு அளிக்கக்கூடாது என ஓ.எஸ்.மணியனும் கூறியதாக தகவல் வெளியானது.

தவெகவுக்கு ஆதரவளித்தால் வரும்காலத்தில் அதிமுக இல்லாமல் பொய்விடும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.வி.சண்முகம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் அடைக்கலமானார். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரிக்கு சென்று நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை திரும்பி எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி.சண்முகத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், இந்தக் கூட்டம் முடிந்தபிறகு சி.வி.சண்முகம் வீட்டில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பான சூழலின்போதே தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால், முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
இந்தச் சூழலில் இன்று 17வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கி எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 37 எம்.எல்.ஏக்களும் ஒன்று கூடி அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி.சண்முகத்தையும் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களில் மூன்றில் 2 பங்குக்கும் மேல் உள்ள எம்.எல்.ஏக்களின் ஆதரவு இவர்களுக்கு இருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version