பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான சித்திரை மாத கடைசி ஞயிற்றுக்கிழமையை ஒட்டி, வழக்கம் போல திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நேற்று இரவு நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமஙளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர்.
அங்கிருந்து ஊர்வலமாக சென்ற பெண்கள், முக்கிய வீதிகள் வழியாக சென்று பகவதி அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவினில் பங்கேற்றனர். பின்னர் 6.30 மணியளவில் பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
