அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக்க 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளதால் அதிமுக உடைகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்ததும், அதன்பின்னர் அதிமுகவை கைப்பற்றியதும் நாடறிந்த ஒன்று. இதில் அவருக்கு இன்னொரு இடைஞ்சலாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தையும் பொதுக்குழுக் கூட்டத்தில் வைத்து வெளியேற்றி முழுவதுமாக அதிமுகவைக் கைப்பற்றினார். இந்த களேபர நிகழ்வுகளுக்குப் பின்னணியாக இருந்து எடப்பாடிக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர்தான் என அதிமுகவினரே கூறியிருந்தனர்.
கடந்த 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வந்தது. இதனால் எப்படியும் மீண்டும் 2026 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் களம் அமைத்து செயல்பட்டும் வந்தது.
இந்த நிலையில்தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கியதும், அதன்பின்னரான அவரது நடவடிக்கைகளும் திமுக, அதிமுக என்னும் இருபெரும் கட்சிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியது.
விஜயால் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என இருகட்சிகளும் அலட்சியம் காட்டிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெருவாரியான ஆதரவு அளித்து 107 இடங்களை வழங்கினார்கள்.
திமுக இரண்டாவது இடத்துக்கும், அதிமுக மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதனால் திமுக, அதிமுகவின் கோட்டையைக் கைப்பற்றும் கனவில் ஓட்டை விழுந்தது.
ஆனாலும் தவெகவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 11 இடங்களைக் கொடுத்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்கும் எண்ணம் அதிமுகவில் சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோருக்கு ஏற்படவே அதற்கேற்ப காய் நகர்த்தத் தொடங்கினர். அதிமுகவில் 47 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அதாவது 30 எம்.எல்.ஏக்கள் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணிக்கு ஆதரவாக உள்ளனர்.
இதனை வைத்து தவெகவுக்கு ஆதரவளிக்க அவர்கள் முடிவெடுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கூவத்தூர் புராஜெக்டை இந்த முறை கையில் எடுத்த சி.வி.சண்முகம், எம்.எல்.ஏக்களை புதுச்சேரி விடுதியில் தங்க வைத்தார்.
இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி சமாதானப் படலம் செய்தாலும், மீண்டும் எம்.எல்.ஏக்கள் இருபிரிவாகப் பிரிந்து கிடப்பதைஅவர்களின் நடவ்டிககைகள் வெளிப்படுத்தி வருகின்றன.
இதனிடையே தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவினை திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளே கொடுத்துவிட்டதால் விஜய் முதலமைச்சராகிவிட்டார்.
இதனால், தங்களின் முன்னெடுப்புகள் இப்போதைக்கு பலனளிக்காததால் சி.வி.சண்முகம் தரப்பு கடுகடுத்துக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. ஆயினும், 30 எம்.எல்.ஏக்களும் சேர்ந்து எடப்பாடிக்கு எதிராகப் கொடிபிடிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே எஸ்.பி.வேலுமணி அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டதாக மே 11ஆம் தேதி காலை தகவல் வெளியானது.
இந்த நிலையில் அதே நாளில் சட்டப்பேரவையில் நடைபெற்ற எம்.எல்.ஏ பதவியேற்புக்குப் பின்னர், திடீரென எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் சட்டமன்ற பேரவை செயலாளரிடமும், தற்காலிக சபாநாயகரிடமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக ஏற்கும்படி கடிதம் அளித்துள்ளனர்.
இதனால் அதிமுக இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது அம்பலமாகி உள்ளது.
