பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் இன்று போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தெரிவிக்கிறது இந்த கட்டுரை.

ஆளும் திமுக அரசின் முறைகேடுகள், ஊழல்களையும் மற்றும் பல அரசியல் நிலவரங்களையும் சவுக்கு மீடியா என்ற வளையொலி தலத்தில் பேசிவரும் சவுக்கு சங்கர் இன்று ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. அதையடுத்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் அங்கு அவரை கைது செய்தனர். கைது செய்து அழைத்துச்செல்லும்போது, “எனது ஃபோன் கிடைக்கவில்லை என்பதற்காக ஏன் வீட்டை தலைகீழாக புரட்டி போட்டுள்ளனர். இதற்கு காரணம் திமுக அரசு. என் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். நீதிமன்றங்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. G PAY-ல் யாரோ எனது EMPLOYEE-க்கு ரூ.90,000 பணம் அனுப்பியிருக்கிறார். அதனை நான் மிரட்டி வாங்க சொன்னதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்து சென்றார்.

இக்கைதுக்கு முன்பாக, சவுக்கு சங்கரும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மாலதி என்பவரும் காலை வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் சவுக்கு சங்கர் பேசும்போது, “ரெட் அன்ட் ஃபாலோ என்ற படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் 30.06.2025 அன்று என்னை வந்து பார்த்து தன்னை பற்றி தவறாக வீடியோவில் பேசியதாகவும், அந்த வீடியோவை நீக்குமாறு கூறியதாகவும், நான், மாலதி மற்றும் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவரை அடித்து ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் வீடியோவை நீக்குவேன் என கூறியதாகவும், கையில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறித்துக்கொண்டதாகவும் FIR போடப்பட்டுள்ளதாக” கூறியிருந்தார். மேலும், அவர் இது தொடர்பான சம்மனுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, “இது முழுக்க பொய் வழக்கு. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. புருஷோத்தமன் என யாரும் வரவில்லை” என நவம்பர் 01 அன்று கடிதம் அளித்துள்ளதாகவும் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை எனவும், நேற்று இரவு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் அவர்கள் பினாமி மூலமாக ஏகப்பட்ட முதலீடுகளை செய்திருக்கிறார் என்று விவரங்களை வெளியிட்டதும் விடியற்காலை இதே வழக்கில் கைது செய்வதற்கு காவல்துறையினர் வந்திருக்கிறார்கள்” எனவும் கூறியிருந்தார்.

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காவல்துறையின் போக்குக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், “நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version