எடப்பாடி பழனிசாமியே கூட 2009-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தான் என்று கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் இதே மனநிலையுடன் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான பணிகளை எடுக்க நேரிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு..
கேள்வி – ஏறத்தாழ 150 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டார், இப்போது இந்த கோரிக்கை சரியானது தானா?
பதில் – ஆறு மாதத்திற்கு முன்னர் கட்சி ஒருங்கிணைப்புத் தொடர்பாக இபிஎஸ்-ஐ சென்று சந்தித்து வந்தபிறகு என்னிடம் கட்சி தொடர்பான முக்கிய தகவல்களை அவர் பேசுவது இல்லை.
கேள்வி – எடப்பாடி பழனிசாமி செல்லுகிற இடம் எல்லாம் கூட்டம் திரள்கிறதே. அப்படியென்றால் அவருக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்றுதானே பொருள். அப்படியானால் நீங்கள் தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக பேசுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில் – கூடுகின்ற கூட்டம் எல்லாம் அழைத்து வரப்படுகின்றவர்கள் எண்ணம் வேறு. அதிமுக தொண்டர்களின் எண்ணம் வேறு.
கேள்வி – விரைந்து நடவடிக்கை என்கிறீர்கள். எத்தனை நாட்கள் கெடு?
பதில் – 10 நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தை ஒரு மாதம் கூட போகலாம். ஆனால் 10 நாட்களுக்குள் முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதே மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைத்து அந்த பணிகளை தொடர நேரிடும்.
கேள்வி – பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா?
பதில் – எனக்கு எந்த ஆசையும் இல்லை
கேள்வி – கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஏன் இணைக்க வேண்டும்.
பதில் – 2009-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தான்.