தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பின் தற்போது முதல்முறையாக கோபிச்செட்டிப்பாளையத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட செங்கோட்டையனுக்கு அவரே எதிர்பார்த்திடாத அளவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பேசிய வார்த்தைகள் ஏற்கனவே பேசப்படும் சில யூகங்களுக்கு மேலும் தூபம் போடுவதாக இருக்கிறது. அத்தகைய பேச்சையும் அந்த யூகங்களையும் அந்த யூகங்களை தொக்கி வரும் தகவல்களையும் இங்கு பார்க்கலாம்.

கடந்த நவ.27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதன் பின்பு அவரிடம் எதிர்பார்த்திராத பல்வேறு கருத்துக்களை செய்தியாளர்களிடையே பேசினார். “ஆண்டவன் தண்டிப்பான்” என்ற எடப்பாடி பழனிசாமிக்கான எச்சரிக்கை; இத்தனை வருடமாக பயணித்த அதிமுகவும், எதிரியாக பார்த்து வந்த அதிமுகவும் தற்போது ஒன்று தான் என்ற கருத்து; புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் வெல்வார், தவெக ஆட்சியை பிடிக்கும் உள்ளிட்ட கருத்துக்களை இத்துணை காலமாக அதிமுகவில் பயணித்த மூத்த அரசியல்வாதியின் வாயால் கேட்பதே தமிழக அரசியலில் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததற்கு பின்பு இன்று முதல்முறையாக தனது சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் மக்கள் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார் செங்கோட்டையன். அங்கு கூடியிருந்த கூட்டம் என்பது சில தினங்களுக்கு முன்பு என்ன செய்வது என யோசிக்கொண்டிருந்த அன்றைய செங்கோட்டையனுக்கு இன்றைய இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அம்மக்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், “இதுவரை ஆண்ட கட்சிகளே ஆள வேண்டுமா? நாளைய தமிழ்நாட்டை ஆளப்போகிறவர் விஜய்! அதை எந் சக்தியாலும் தடுக்க முடியாது. தவெக வெற்றிவாகை சூடப்போகிறது” என கூறியதோடு, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு வழிகாட்டியாக இருந்ததை போல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்” எனக்கூறியது தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை உற்சாகமடைய செய்ய, அதிமுகவினரை கடுப்பாக்கியுள்ளது.

இதைவிட ஹைலைட்டாக செங்கோட்டையன் சொன்ன மெசேஜ் என்னவென்றால், “காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பரில் நமது கூட்டணி வலிமையடையும். நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்” என்பது தான். தவெகவில் இணைந்ததிலிருந்தே செங்கோட்டையனிடம் விடாது கேட்கப்படும் அந்த ஒரு கேள்வி, “உங்களைப்போல் இன்னும் பலர் அதிமுகவிலிருந்து வருவார்களா?” என்பது தான். அதற்கான பதிலாகவும் அவரது இந்த பேச்சை பார்க்கலாம். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் என அவர் கூறுவது, தற்போதைய எடப்பாடி அணியில் இருப்பவர்களோ? அல்லது நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்களா? என்பது தான். இந்த இரண்டு கேள்விகளுக்கு கீழ் இரண்டு தகவல்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஒன்று, தற்போதைய அதிமுகவிலுள்ள முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனின் இந்த அதிரடி நகர்விற்கு பின்பு, தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆலோசித்துள்ளனர். அதில் அதிமுகவின் எதிர்காலம் பற்றியும் ஓரளவு பேசியுள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபக்கம் அடுத்தது இவர் இவர்கள் தவெகவில் சேரலாம் என கூறும் பெயர்களில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் அதனை மறுத்தும் வருகின்றனர். அனால், நிச்சயமாக சில முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ‘தவெக’விற்கு தாவுவார்கள் என அதிமுகவின் பல்ஸ் தெரிந்த சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்தகைய சூழல்கள் இருக்கிறது என்பதற்கான மற்றுமொரு வெளிப்பாடாகவே ஆர்.பி.உதயகுமார் போன்றாரது சுய ஊக்கமளிக்கும் வார்த்தைகள் நிறைந்த வீடியோக்கள். மேற்கூறிய சூழல் நடக்காமல் இருப்பது எடப்பாடி பழனிசாமி அவர்களின் கைகளில் தான் உள்ளது.

மேற்கூறிய இரண்டு தகவல்களில் மற்றொன்று, இவர்களில் பட்டியலில் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. செங்கோட்டையன் சொன்ன முன்னாள் அமைச்சர்களின் வரையறைக்குள் இவர்களும் வருவார்கள். ஆகையால், ஒருவேளை ஓ.பி.எஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர்களை தான் செங்கோட்டையன் சொல்கிறாரோ? என்ற கேள்வியும் எழுகிறது. இவை நடக்கும் பட்சத்தில் அதனை அதிமுகவினர் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அனால் அந்த இணைவுகள் ‘தவெக’வுக்கு ஒரு பலமான பார்வையை மக்கள் மத்தியில் கொடுக்கும் என்பது உறுதி. மேற்கொண்டு இணைவுக்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், டிசம்பருக்கு பின் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்க தயாராகிவிட்டனராம் ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும். ஆக, இதன் அடிப்படையிலேயே, “டிசம்பரில் கூட்டணி வலிமைபெறும்” என தொண்டர்களிடையே செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

ஏற்கனவே கூட்டணி விரிவடையவில்லை என்பதில் படு அப்செட்டாகி இருக்கும் அமித்ஷாவை எப்படி சமாளிப்பது என விழிபிதுங்கியுள்ள எடப்பாடியாருக்கு செங்கோட்டையனின் நடவடிக்கைகள் ‘ஷாக்’ ஆகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், ஒன்று அதிமுகவின் இத்தகைய நிலைக்கு காரணமானவரும், இத்தகைய நிலையை இப்போதும் கூட மாற்றும் வல்லமையும் கொண்டவரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டும் தான். கூட்டணி விவகாரத்தில் தற்போதைக்கு குறைந்தபட்சம் ஒரு மாற்று வழியாவது தேவை. ஆனால் ஒன்று, தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் ‘அதிமுக தொண்டர்களுக்கு 2026 வெற்றி தான் சஞ்சீவி மருந்து’ என்பதை இ.பி.எஸ் உணர வேண்டும் என்கின்றனர் அதிமுக நலம் விரும்பிகள்.

“தனி மனிதரை விட இயக்கம் பெரியது…”

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version