2026 சட்டமன்றத் தேர்தலில் டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் தமிழக அரசியல் மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

ஓபிஎஸ் அணி தவெகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது தேர்தல் கூட்டணி குறித்து பெரும்பாலோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.அதனடிப்படையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய போவதில்லை என்றும், துரோகத்திற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே அவர் விரைவில் நல்ல முடிவுகளை மேற்கொள்வார்” என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் உங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடன் பேசிக்கொண்டு இருப்பது உண்மை எனவும், அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். தவெகவில் என்னைப் போன்றவர்களுடன் அவர்கள் தரப்பிலும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். விரைவில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version