பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது.
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த இந்த புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 70 சிங்கப்பெண் படைகள் மாநிலம் முழுவதும் களமிறங்குகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாகத் தடுக்கவும், அவசர காலங்களில் உடனடி காவல் உதவியை வழங்கவும் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு போலீஸ் படை இன்று முதல் மாநிலம் முழுவதும் செயல்படத் தொடங்குகிறது.
முதலமைச்சர் விஜய் அண்மையில் சென்னை மாநகரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டத்தின் கீழ் மொத்தம் 270 சிங்கப்பெண் படைகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 70 படைகள் இன்று முதல் பணியில் ஈடுபடுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பெண் படை செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 12 சிங்கப்பெண் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களில் தலா 4 படைகளும், பிற மாநகர காவல் ஆணையரகங்களில் தலா 2 படைகளும் செயல்பட உள்ளன.
ஒவ்வொரு சிங்கப்பெண் படையிலும் இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு பெண் காவலர் இடம்பெறுவர். இதற்காக மாநிலம் முழுவதும் 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 420 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இவர்கள் ரோந்து மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்த சிறப்பு படையில் முழுமையாக பெண் காவலர்களே பணியாற்ற உள்ளனர். எனினும் வாகன ஓட்டுதல் உள்ளிட்ட சில துணைப் பணிகளுக்காக ஆண் காவலர்கள் உதவி செய்வார்கள்.
பெண்கள் அவசர உதவி கோருவதற்காக தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்கள் மற்றும் தொடர்பு வசதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதுவரை காவல்துறையின் அவசர உதவி எண் 100-ஐ பொதுமக்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பெண் படைகளின் பயன்பாட்டிற்காக 319 நான்கு சக்கர வாகனங்களும், 101 இருசக்கர வாகனங்களும் வாங்கப்பட உள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
