தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்த சம்பவம் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கையை கட்சிக் கட்டுப்பாட்டுக்கு எதிரான செயல் எனக் கருதிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்டோரின் பதவிகளை உடனடியாகப் பறித்தார். பின்னர் வேலுமணி அணியினர் அதிமுகவில் மீண்டும் இணைந்தபோதும், அவருக்கு கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேலுச்சாமி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சில காலம் பதவியின்றி இருந்த வேலுமணிக்கு கடந்த வாரம் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பின்னணியில், தனது சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூருக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வேலுமணி நேற்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த மூடிய கூட்டத்துக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேடையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வக் கொடிகள், எடப்பாடி பழனிசாமியின் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்குப் பிறகு நிர்வாகிகளுடன் வேலுமணி உணவு அருந்தினார்.

கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, “எங்கள் தலைவர்களான அம்மா, எம்.ஜி.ஆர் படங்கள் இங்கே உள்ளன. ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் உணவு அருந்தவுமே வந்துள்ளேன். வரும் 2-ம் தேதி எம்.எல்.ஏ அலுவலகம் செல்லத் திட்டமிட்டுள்ளேன்” என்றார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளின் தகவலின்படி, வேலுமணி தனது ஆதரவாளர்களிடம் முக்கிய விளக்கங்களை அளித்தார்.

அதிமுக, திமுகவை எதிர்க்கும் வகையில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி என்பதை நினைவூட்டிய அவர், திமுகவுடன் கூட்டணி முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். திமுகவை எதிர்ப்பதாலேயே தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்ததாக விளக்கினார். மேலும், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காதது குறித்து கவலை இல்லை எனக் கூறிய வேலுமணி, நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்த பல நிர்வாகிகளின் பதவிகளை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதப் போவதாக அறிவித்தார். அவர்களுக்கு பதவி வழங்கப்படாவிட்டால் தானும் புதிய பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று ஆவேசமாகப் பேசினார்.

செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோரை நீக்க வேண்டாம் என்ற தனது ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்ததாகவும் வேலுமணி குற்றஞ்சாட்டினார். சரியான கூட்டணி அமைக்காததே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என விமர்சித்த அவர், தனது எதிர்கால அரசியல் பாதையை இந்தத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் மக்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தீர்மானிப்பதாகக் கூறினார்.

இந்தக் கூட்டம் மற்றும் வேலுமணியின் பேச்சுகள், எடப்பாடி தலைமையிலான அதிமுக உயர்மட்டத்துக்கு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. கட்சியின் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பதவிகள் வழங்கப்படாத நிர்வாகிகளிடையே அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், அதிமுகவின் எதிர்கால ஒற்றுமைக்கு இது சவாலாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version