மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 உரிமக் கட்டணம் ரூ.30,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மனமகிழ் மன்றங்கள் (என்டர்டெயின்மெண்ட் கிளப்கள்) தொடங்குவதற்கான சிறப்புக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. முன்பு ரூ.15 லட்சமாக இருந்த மனமகிழ் மன்றம் தொடங்கும் அனுமதிக் கட்டணம் தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மதுபான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 ஆகவும், உரிமக் கட்டணம் ரூ.30,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டண அமைப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் கட்டணங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும். நகராட்சிகளுக்கு ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் ரூ.20 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உயர்வு ஏற்கெனவே சிரமத்தை எதிர்கொண்டு வரும் மனமகிழ் மன்ற உரிமையாளர்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசு தரப்பில் பாதுகாப்பு விதிமுறைகள், உரிம வழங்கல் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல், வரி ஏய்ப்பைத் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய விதிகள் அமலுக்கு வந்ததால், புதிய மனமகிழ் மன்றங்கள் தொடங்க விரும்புவோர் உடனடியாக அரசின் புதிய கட்டண அமைப்புக்கு ஏற்ப விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் மன்றங்கள் புதுப்பித்தல் செய்யும்போது இந்தக் கட்டண விதிகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் பொழுதுபோக்கு துறையில் ஒழுங்குமுறையை கொண்டு வரும் என அரசு நம்புகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version