கல்விச் செல்வம் மட்டும்தான் வெள்ளத்தால் போகாது, வெந்தழலால் வேகாது, யாராலும் கொள்ளையிட முடியாது என்பார்கள். அந்தக் கல்வியைப் பல தலைமுறைகளுக்குக் கொடுத்து வந்த அறிவுத் திருக்கோயிலான யாழ் பொது நூலகம், 44 ஆண்டுகளுக்கு முன், இதே ஜூன் 1-ம் தேதிதான் எரியூட்டப்பட்டது. வரலாற்றுக் கறுப்பு நாளின் வடு உலகத் தமிழினத்தின் மனங்களில் இன்னும் ஆறாமல் இருக்கிறது. 

இனவாத பிரச்னையும் இலங்கையும் 

இலங்கையில் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் சிங்களர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இனவாத பிரச்னை இருந்திருக்கிறது. தமிழர்களைச் சிங்களர்கள் வெறுத்திருக்கிறார்கள். அவர்களது வளர்ச்சியும் முன்னேற்றமும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதில் கூட வெறுப்பும் அரசியலும் விதைக்கப்பட்டிருந்த காலம் அது. அதுதான் உலகத் தமிழர்களின் அறிவியல் செல்வமாகப் போற்றப்பட்ட யாழ் நூலகத்தை எரித்தது. இதைப் பற்றிப் பேசும்போது  “தமிழர்களின் அறிவை என்று அவர்கள் எரித்ததனால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்கிறார், யாழ் நூலகம் பற்றிய ’எரியும் நினைவுகள்’ என்ற ஆவணப்படம் எடுத்த இயக்குநர் சோமிதரன். 

வட இலங்கைத் தீ

இலங்கையில் 1981-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அதற்கான வாக்குசேகரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் மே 31-ம் தேதி யாழ்ப்பாணத்தின் நாச்சிமார் கோவிலடி என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை நடந்தது. அப்போது பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த காவலர்கள் இருவர் மீது எதிர்பாரா விதமாகத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர்துறந்தார். இது அப்போது ஆட்சியில் இருந்த சிங்கள அரசைச் சினம் கொள்ள வைத்தது. 

வன்முறையும் வெறிச்செயலும் 

யாழ்ப்பாணத்தில் ஒருபுறம் குவிக்கப்பட்ட காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உள்ளிட்ட தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மறுபுறம் சிங்கள இனவாத ஆதரவாளர்கள் கடை, கட்டடங்களுக்குள் புகுந்து, அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டம் ஆடினர். இதில், பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் உட்பட அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இவர்கள் இரவில் செய்த சதி, விடிய விடிய எரிந்தது. மறுநாளும் ஈழநாடு என்ற நாளிதழின் அலுவலகம் கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் ப.சிவானந்தன் கடுமையாகத் தாக்கப்பட்டார். அன்றுடனாவது வன்முறைச் செயல் ஓயும் என நினைத்தனர். ஆனால் அன்றிரவு வன்முறைக் கும்பல் பேரழிவு ஒன்றை நடத்தியது. இரவு 10 மணி அளவில் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைந்த சிங்கள வன்முறைக் கூட்டம் ஒன்று, நூலகத்தை அடித்து நொறுக்கிப் புத்தகங்களைக் கொளுத்தியது. நூலகத்திற்கு அருகிலேயே காவல்நிலையம் இருந்தது. ஆனாலும் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். உலகத் தமிழனத்தின் அறிவுக் களஞ்சியம் தீக்கிரையானது. சில புத்தகங்களே மிஞ்சின. 

யாழ் நூலகத்தில் என்னென்ன இருந்தன?

1930-களின் பிற்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் கே.எம். செல்லப்பா என்பவரால் மிகச் சிறிய அளவில், அவர் வீட்டிலேயே தொடங்கப்பட்டதுதான் யாழ் நூலகம். தம் சேகரிப்பிலிருந்த நூல்களைக் கொண்டு அவர் அதை உருவாக்க, அதற்குக் கிடைத்த வரவேற்பு பின்னாளில் 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய, பெரிய கட்டடம் கட்டப்பட்டு, யாழ் பொது நூலகமாகக் கம்பீர உருவத்தைப் பெற்றது. மதுரையில் படையெடுப்பு நடந்தபோது பல படகுகள் மூலம் அனுப்பப்பட்ட பல அரிய சுவடிகள் இருந்தன. சிலப்பதிகாரத்தின் மூலப் பிரதியை உ.வே.சா இந்நூலகத்திலிருந்து எடுத்ததாகக் கூறப்படுகிறது. 1800-களில் வெளியான இலங்கையின் வரலாறு கூறும் பல நாளேடுகள் இந்நூலகத்தில் இருந்தன. 1585-ல் கத்தோலிக்க மதத் தலைவர் ஒருவரால் தமிழில் எழுத்தப்பட்ட நூல் ஒன்று இருந்திருக்கிறது. கண்டி சிறையில் இருந்தபோது ராபர்ட் க்னாஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய “இலங்கையின் வரலாறு” புத்தகத்தின் மூல பிரதி இருந்திருக்கிறது. முதலியார் ராசநாயகத்தின் ‘பண்டைய யாழ்ப்பாணம்’, தமிழின் முதல் இலக்கியக் கலைக்களஞ்சியமான முத்துத் தம்பிப் பிள்ளையின் ‘அபிதான கோசம்’, சிங்காரவேலு முதலியார் தொகுத்த ‘அபிதான சிந்தாமணி’, கணக்கற்ற சித்த வைத்திய ஓலைச்சுவடிகள் இருந்திருக்கின்றன. இதிலிருந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை 97,000 என்கிறது ஒரு குறிப்பு. 

யாழ் நூலகம் இப்போது எப்படி இருக்கிறது? 

இத்தகைய சிறப்புகளைக் கொண்டதால்தான் யாழ் நூலகம் உலகத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியம் என்று கருதப்படுகிறது. 1981-ம் ஆண்டு நடந்த பேரழிவுக்குப் பின்னர், 2004-ம் ஆண்டு நூலகம் இலங்கை அரசால் புனரமைக்கப்பட்டது. இந்திய இலக்கியங்களுக்கு என்று தனிப்பிரிவைத் தற்போது இந்நூலகம் தாங்கி நிற்கிறது. குளிரூட்டப்பட்ட அறையில் உயர்ரகப் பாதுகாப்புடன் ஓலைச் சுவடிகள் பராமரிக்கப்படுகின்றன. குழந்தைகள் பிரிவு, தற்கால இலக்கிய நூல்கள் எனப் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. இலங்கைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதியாக இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் புதிதாகப் புத்தகம் எழுதி வெளியிடும் பலர், யாழ் பொது நூலகத்திற்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்து வருகின்றனர்.

வெந்தழலால் வேகாத கல்வியை வெற்று இனவெறி எரித்த வரலாறு, நமக்குப் பிரிவினையின் பெருந்துயரைக் காட்டி நிற்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version