சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், மாநகராட்சி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. குடியிருப்புகளுக்கு இடையே உள்ள தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்பதால், அப்பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அண்டை வீட்டாருக்கும் உணவளிப்பவர்களுக்கும் இடையே மோதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்து வந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறின்றி, நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இதற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இனி உணவு வழங்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 39 இடங்களின் பட்டியலை மாநகராட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த நடைமுறை மூலம் தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பொது இடங்களில் ஏற்படும் மோதல்களைத் தவிர்த்து, நகரத்தின் தூய்மையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்போர், மாநகராட்சி ஒதுக்கியுள்ள இந்த இடங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version