கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே போலியோ சொட்டு மருந்து உட்கொண்ட நிலையில், ஒன்றரை வயதுக் குழந்தை திடீரென உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நல்லாத்தூர் கொளுத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (27), ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜம். இந்தத் தம்பதியருக்கு ஹரிஹரன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். நேற்று நல்லாத்தூர் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமிற்குத் தனது குழந்தையை ராஜம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குப் பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். ஆனால், வழக்கமான நேரத்தைத் தாண்டியும் குழந்தை நீண்ட நேரமாகத் தூங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை எழுப்ப முயன்றபோது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாகத் தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில், தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்த பிறகே தெரியவரும் என்று மருத்துவக் குழுவினர் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
