ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சாதி, மத வேற்றுமைகளைக் கடந்து மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் இந்த ராமநாதபுர மண்ணை, கடந்த ஐந்தாண்டுகளில் புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்த பெருமையுடன் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டியுள்ளோம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த வளர்ச்சி இதோடு நின்றுவிடக்கூடாது என்றும், உலக வரைபடத்தில் தமிழ்நாட்டை ஒரு தனித்துவமான ‘பிராண்டாக’ உயர்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறும் மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தனுஷ்கோடி சுற்றுலாத்தளம் மேம்பாடு, அறிவுசார் மையம் மற்றும் பாம்பன்-மண்டபம் இணைப்புத் திட்டங்கள் என ராமநாதபுரத்தின் வளர்ச்சிக்காகச் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், “எதிர்காலத்தில் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களைக் கடைகளில் வாங்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்” என்றும் புதிய வாக்குறுதிகளை வழங்கினார். “நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்வதைப் போல எடப்பாடி பழனிசாமியால் எதையேனும் சொல்ல முடியுமா?” என அவர் சவால் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவின் அட்டூழியங்களை எதிர்க்க இபிஎஸ்-க்கு துணிவில்லை என்றார். “மோடியையும், அமித்ஷாவையும் எதிர்த்துப் பேசச் சொன்னால் பயத்திலேயே சுவிட்ச் ஆஃப் ஆகிவிடுபவர் பழனிசாமி” எனச் சாடினார். பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடி சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவரது நான்கு ஆண்டுகால ஆட்சியை ‘இருண்ட காலம்’ என வர்ணித்த முதலமைச்சர், பெண்களைக் கண்ணியம் இல்லாமல் விமர்சிக்கும் பழனிசாமிக்கு, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவித்தார். இறுதியாக, திறமையான நிர்வாகத்தால் தமிழகம் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ராமநாதபுரத்தில் 100 சதவீத வெற்றியைத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

