நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
நடப்பாண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கேன் என் நேரு, ஐ பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி கே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். முதல் நாளில் கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அண்மையில் மறைந்த சிபு சோரன், அச்சுதானந்தன், சுதாகர் ரெட்டி, இல கணேசன், ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பும், நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு நாளைய அலுவல் ஒத்தி வைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பாமக சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் இருப்பதாகவும், அன்றை தினங்கள் ஏனைய அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும் எனவும், குறிப்பிட்ட மூன்று தினங்களில் வழக்கம் போல கேள்வி நேரங்கள் நேரம் இருக்கும் எனவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.