ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மாற்றுப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 159 அரசு மதுபானக் கடைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகம் முன்பாக அவர்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் இந்தத் தொடர் கடையடைப்புப் போராட்டத்தால், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அரசுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வருவாய் இழப்பைத் தடுக்கும் நோக்கில், இன்று மாலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் இடைநிலை அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி, நாமக்கல் பகுதியில் உள்ள 5 கடைகளைத் திறந்து மது விற்பனையைத் தொடங்கினர்.
கடைகள் திறக்கப்பட்ட விபரம் தெரிந்ததும், மதுப்பிரியர்கள் சாலையில் நீண்ட வரிசையில் சாரை சாரையாகக் திரண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் படுஜோராக விற்பனை நடந்த நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் அலுவலக உத்தரவின்பேரில் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே நின்றிருந்த மதுப்பிரியர்களைப் போலீசார் அறிவுறுத்தி கலைந்து போகச் செய்தனர். ஊழியர்கள் போராடி வரும் நிலையில், அதிகாரிகளை வைத்து அரசு மது விற்றது இப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
