பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், மதுபான பெட்டிக்கு 90 ரூபாயும் அரசுக்கு கூடுதல் கட்டணமாக செலுத்த, மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வரும் வருவாயில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு பெட்டி மதுபானத்துக்கும் கூடுதல் கட்டணம் விதிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பீர் பெட்டிக்கு ₹40, மதுபான பெட்டிக்கு ₹90 என அரசுக்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 4,048 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகள் 11 நிறுவனங்களிடம் இருந்தும், பீர் வகைகள் 7 நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன. 2025-26ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ஆயத்தீர்வை வரியாக ₹11,836 கோடியும், மதிப்புக் கூட்டு வரியாக ₹39,010 கோடியும் கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடனேயே, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை மூடியது. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கடந்த ஆட்சிக் காலங்களில், மதுபான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சில தொகைகள் அரசுக் கணக்கில் வராமல், தனிநபர்களுக்குச் சென்றதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அரசு நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றில் உறுதியாக உள்ளார் முதலமைச்சர். இதன் ஒரு பகுதியாக, மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து உரிமத் தொகைக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இம்மாதம் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இதன்படி, மதுபான வகைக்கு ₹90, பீர் வகைக்கு ₹40, ஒயின் வகைக்கு ₹20 என கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். முக்கியமாக, இந்தப் புதிய கட்டணம் டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மதுபானங்களின் சில்லறை விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே, பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது. இந்த நடவடிக்கை அரசின் வருவாயை அதிகரிப்பதோடு, மதுபானத் துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீர்திருத்தம், தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், தூய்மையான நிர்வாகத்தின் முன்னுதாரணமாகவும் அமையும் எனக் கருதப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version