இந்தியாவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் விரைவில் முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு பதிலாக, ‘விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற பெயரில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த புதிய மசோதாவின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், கிராமப்புறக் குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும் வேலைவாய்ப்பு நாட்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டாலும், இந்த புதிய சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் செலவினங்கள் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய சட்ட மசோதா, “ஒவ்வொரு நிதியாண்டிலும், கிராமப்புறக் குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்கள் தாங்களாக முன்வந்து திறமையற்ற உடல் உழைப்பு வேலைகளை செய்ய முன்வந்தால், அவர்களுக்கு 125 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய சட்டத்தின் கவனம் முழுவதும், பொதுப் பணிகளை ஒருங்கிணைத்து, ‘விக்சித் பாரத் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அடுக்கை உருவாக்குவதாகும். இதில் நீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், கிராமப்புறத்தின் முக்கிய உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை சமாளிக்கச் சிறப்புப் பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் இடம்பெறும்.
மகாத்மா காந்தி பெயரை நீக்குவது ஏன்?
2005ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் NREGA சட்டம் இயற்றப்பட்டு, பின்னர் 2009இல் மகாத்மா காந்தியின் பெயர் இணைக்கப்பட்டு MGNREGA எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பெயரைக் குறிக்கும் பழைய சட்டத்தை நீக்கும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “மகாத்மா காந்தி உலகின் மிகச் சிறந்த தலைவர். இந்தத் திட்டத்தில் இருந்து அவரது பெயரை நீக்குவது ஏன் என்று எனக்கு புரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
