சென்னை தலைமை செயலகத்தில் தினமும் காலை, மாலை என இருநேரமும் முதலமைச்சர் வரும் போது மக்கள் அவரை காண வேண்டும் என காத்திருப்பர். பொதுமக்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்த புகார்தாரர்கள் என அனைவரும் முதலமைச்சர் செல்லும் நேரத்தை அறிந்து வழியில் நின்று, “தலைவா, தளபதி, முதலமைச்சரே” என வாழ்த்து கோஷங்களை எழுப்புவது வழக்கம்.
தினமும் பொதுமக்களுக்கு கையசைத்தவாறு செல்லும் முதலமைச்சர், இன்று சென்னையில் திடீரென பெய்த கனமழையிலும், தலையில் பாலித்தீன் கவர்கள், கைக்குட்டைகளுடன் மழையில் நனைந்தவாறு நின்றிருந்த பொதுமக்களை பார்தார்.
கொட்டும் மழையிலும் பொதுமக்கள் நின்று கொண்டிருப்பதை கண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், வழக்கம் போல் கையசைக்காமல், இரு கரங்களையும் கூப்பி வணக்கம் வைத்தவாறு தலைமைச் செயலகத்தில் இருந்து தனது கான்வாய் வாகனத்தில் புறப்பட்டார். முதலமைச்சரின் இந்த செயலை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர். செல்போன்களில் படம் எடுத்து ஆரவாரத்துடன் முதலமைச்சரை வழியனுப்பி வைத்தனர்.
