மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு சுமார் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.

ஈரானுக்கும் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இந்தச் சூழலில் இரு நாட்டுத் தலைவர்களின் இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் போர் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ‘ஹார்மூஸ் நீரிணை’ (Strait of Hormuz) தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஹார்மூஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்தப் பாதையைத் தனது ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்பதால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த உரையாடல் குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்தும், உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஹார்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பாகவும், திறந்த நிலையிலும் வைத்திருப்பதன் அவசியம் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்துள்ளனர். போர் தொடங்கிய பிறகு இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசும் மூன்றாவது முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலில், ஈரானுடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ள இந்தியாவின் தலையீடு போரை நிறுத்த உதவும் என அமெரிக்கா நம்புகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை போர் பதற்றத்தைக் குறைக்க உதவும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version