சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மாவட்ட மருந்து கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருந்துகளின் தரம், இருப்பு மற்றும் காலாவதி தேதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆய்வில் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எவ்வளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்பதை ஆன்லைன் மூலமாகவே துல்லியமாகத் தெரிந்து கொள்ளும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேற்காசியப் போர்ச் சூழலால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், அதனைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திருச்சி செவிலியர் மாணவி மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  ஒவ்வொரு அறுவை சிகிச்சை போது நோயிகளுக்கு மயக்கமருந்து கொடுத்து தான் அறுவை சிகிச்சைகள் நடைபெறும் அது வரை நோயாளி மயக்கத்தில் இருப்பார். பொதுவாக ஒரு சில நோயாளிகளுக்கு இதில் பிரச்சனை ஏற்படும் அது மூலம் கூட சில நோயளிகளுக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் திருச்சியில் செவிலியர் மாணவி விவகாரத்தில். முதல்வர் நேரடியாக தலையிட்டு மருந்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவின்படி அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் விசாரணை எவ்வித அழுத்தமும் இன்றி, நியாயமாகவும் வெளிப்படையாகவும் நிறைவடைந்துள்ளது. இன்று அல்லது நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்படாதவாறு முதல்வர் நேரடியாக சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் குற்றச்சம்வபங்கள் அதிகரித்துள்ளது என எதிர்கட்சிகள் விமர்சனம் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  எதிர்கட்சிகள் தோல்வியில் இருந்து இன்னும் வெளியே வர வில்லை அந்த அதிர்ச்சியில் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் எனவும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக பார்க்கிறோம்.

கடந்த கால ஆட்சியில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்ததால் காவல்துறைக்குச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது. முந்தைய காலங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருள் பயன்பாடே முக்கியக் காரணமாக இருந்தது.

தற்போது முதல்வர் காவல்துறையினரை எவ்வித அழுத்தமும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார். முன்னதாக தவெக தனது கொண்டாட்ட மனநிலையில் இருந்து இன்னும் வெளிவரவில்லை அதனால் நான் அதிக குற்றசம்பவங்கள் நடைபெறுகிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்து விரைவில் விரிவான ஆய்வு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சுமார் 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கான உரிமங்கள் (லைசென்ஸ்) வழங்கும் நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் நெறிமுறைப்படுத்தப்படும். பெரிய மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது; சிறிய கிளினீக்குகளுக்குப் பழைய கட்டணமே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை செயலாளர் பேசுகையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, எபோலா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை விமான நிலையத்தில் தீவிரப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகச் சிறப்பு வார்டுகள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version