தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (ஜூலை 16) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இம்மாத இறுதியில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களைக் கவரும் வகையிலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் தொடர்பான அம்சங்களை அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, அதற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல்வேறு முக்கிய துறைகளின் ஆய்வுக்கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் நிறைவடைந்துள்ளன. அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 22-ம் தேதி வரை பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version