முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. நிர்வாகத்தை முறைப்படுத்துவதிலும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும் இந்த ஒரு மாத காலத்தில் கவனம் செலுத்தியுள்ளது தவெக அரசு.
மக்கள் அளித்த அதிர்ச்சி வைத்தியம்
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்திற்கான தீர்ப்பை அளித்த மக்கள், அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். 60 ஆண்டுகளாக மாறிமாறி இருந்து வந்த திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக, 2024 பிப்ரவரி 2ம் தேதி விஜய் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவளித்து பெருவாரியாக வெற்றி பெறச் செய்தனர்.
தவெக 108 இடங்களிலும், திமுக 59 இடங்களிலும் (திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது), அதிமுக 47 இடங்களிலும் (அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது) வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்காதநிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
3 முக்கிய அரசாணைகளில் முதல் கையெழுத்து!
மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக மூன்று முக்கிய அரசாணைகளில் விஜய் கையெழுத்திட்டார்.
வீட்டு மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மாநிலம் முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப் படைத் திட்டம், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
717 டாஸ்மாக் கடைகள் மூடல்!
பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக வெளியான அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றது. 717 கடைகளில் பணிபுரிந்தவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்தது.
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவெக அரசு நடவடிக்கை எடுத்தது. மதுபான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சுமார் ரூ.1,200 கோடி இனி அரசுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேகதாது பிரச்சனையில் முன்னெடுப்பு!
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடுக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. மேகதாது திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை முன்வைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புதிய வழக்கை தொடர்ந்து தமிழக அரசு.
முதல்வராக முதல் டெல்லி பயணம்!
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மே 27ம் தேதி முதன்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார் விஜய். பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அனுமதியின்றி மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும் என்பதில் உள்ள குழப்பத்தைத் தீர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் வான்வழி அமைப்பு மையம் மற்றும் மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்குத் தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து கோரிக்கை வைத்தார் முதலமைச்சர் விஜய்.
ரூ.18,600 கோடியில் L&T நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
ஜூன் 4ம் தேதி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்துடன் 3 முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மூலம் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
‘வெற்றித் தமிழகம்’
ஜூன் 5ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் 436 திட்டங்கள் கொண்ட தொலைநோக்கு ஆவணத்தை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
35 அரசுத் துறைகளுக்கும் தனித்தனியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களைச் சரியாகக் கண்காணிக்க ‘சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை’-யும் அமைக்கப்பட்டது.
பதவியேற்ற போது கையெழுத்திட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை திட்டத்தை, ஜூன் 9ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இந்த அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.
வரும் காலங்களில் அறிவித்த திட்டங்கள் எவ்வாறு தடையின்றிச் செயல்படுத்தப்பட்டு, அடித்தட்டு மக்கள் வரை சென்றடைகின்றன என்பதிலேயே ‘வெற்றித் தமிழகம்’ அரசின் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.
