தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத திருப்பங்கள் நிறைந்த தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமைந்தது. 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகள் தோல்வியை சந்தித்த நிலையில், 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற போதும், ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காத சூழல் அமைந்தது.
இந்தநிலையில், ஆட்சி அமைக்க திரைமறைவில் நடந்த வேலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜய்யின் எழுச்சியைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் இணைந்து “திராவிடக் கூட்டணியை” உருவாக்க முயன்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பான பேசு பொருளாகி உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி, மாநில அரசியலில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதைத் தடுக்க, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்க்க முயன்றதாகவும், தன்னை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்த திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் திருமாவளவன் உடைத்துள்ள உண்மைகள், தமிழக அரசியலின் பலவீனங்களையும் அரசியல் கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.
தன்னை முதலமைச்சராக முன்னிறுத்தி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்க திரைமறைவில் திட்டமிடப்பட்டது உண்மைதான் என திருமாவளவன் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.
“108 இடங்களில் தவெக வென்றுள்ள நிலையில், வெறும் 2 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள விசிக மக்களின் தீர்ப்பைத் தடுத்து, முதலமைச்சர் பதவியைப் பறித்துக் கொண்டது” என்ற கடுமையான விமர்சனம் எழும் என்பதால், தார்மீக அடிப்படையில் விசிகவின் உயர்மட்டக் குழுவோடு ஆலோசித்து அந்தத் திட்டத்தை நிராகரித்ததாக அவர் கூறியுள்ளார்.
தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் தரும் இறுதி நிமிடம் வரை தன்னை முதலமைச்சராக முன்னிறுத்துவதாகவும், ஆதரவு அளிக்கும் முடிவை திரும்ப பெறுமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, ஆளுநர் ஆட்சி வருவதைத் தடுக்கவும், பாஜகவின் பின்னணி நகர்வுகளை முறியடிக்கவும், தவெக அரசுக்கு விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவுக் கடிதம் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் இந்த அதிரடிப் பேட்டி, ஏற்கனவே தேர்தல் தோல்வியால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அதிமுகவுக்குள் நிலவி வரும் கடுமையான உள்முகப் பூசலை தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் 3வது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் 3வது இடத்துக்கு சென்றதையும், 2019, 2021, 2024 நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றம் தேர்தல் என அதிமுகவின் தொடர் தோல்விகளையும் ஏற்க அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானநிலையில், ஒரு வாரம் கழித்தே அதாவது மே 11ம் தேதி மக்களை சந்தித்து தோல்வி குறித்து இபிஎஸ் பேசியது, நிர்வாகிகளின் அழுத்தம் காரணமாக தனது பதவிக்கு ஆபத்து என்ற சூழலிலேயே அவர் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வெளியில் இருந்து திமுக ஆதரவு அளிக்க இருப்பதாகவும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற உள்ளதாகவும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் இபிஎஸ் பேசியதாக தற்போது தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சின் நீட்சியாகவே, விரைவில் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் என அதிமுக எம்.பி., தம்பிதுரை பேசியது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து இபிஸ் ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் அளித்தது, அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நிலையான ஆட்சி அமைய கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது போன்ற காட்சிகள் அரங்கேறியதாகவே பார்க்கப்படுகிறது.
இவைகள் நடக்காமல் போகவே, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அதுவும் கைகூடவில்லை. இந்தநிலையில் தான், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “தமிழகத்தின் முதல் தலித் முதலமைச்சரை” உருவாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடுத்துவிட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். திருமாவளவனை முதலமைச்சராக்க அக்கட்சியின் ஒரு தரப்பு தீவிரமாக முயன்ற போது, இபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. திருமாவளவனை முதலமைச்சராக்கும் திட்டத்திற்கு அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடையே முழுமையான சம்மதம் இல்லை என்பதே இபிஎஸ் தரப்பின் வாதம்.
இதனிடையே தவெக ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி பேரம் பேசிவிட்டு, பழியைத் தன் மீது போடுவதாகக் இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது.
தற்போது அதிமுகவில் நிலவி வரும் அதிகாரப் போட்டி மற்றும் இபிஎஸ்-ன் தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டைத் தக்க வைக்கவும், தவெக உடனான ஆதரவு நிலைப்பாட்டைத் தடுக்கவும் எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். ஆனால், தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்ததும், தனக்கு ஆதரவு அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பை மட்டும் சந்தித்தது அதிமுக தரப்பில் தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிக்காட்டியதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தால் அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரைத் தாண்டி, தற்போது கட்சிக்குள் இருக்கும் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றோரே இபிஎஸ்-க்கு எதிராகத் திரும்பியிருப்பது அக்கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது.
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு த்ரில்லர் திரைப்படத்தைப் போல நிமிடத்திற்கு நிமிடம் மாறி வருகிறது. தவெக-வின் ஆட்சி அமைய ஆதரவு அளித்தாலும், திரைமறைவில் நடந்த இந்த “முதலமைச்சர் ஆஃபர்” அரசியல், வரும் நாட்களில் இன்னும் பல விவாதங்களையும், கூட்டணிக் மாற்றங்களையும் உருவாக்குமா என்பதை கட்சிகளின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரியவரும்.
