தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. ‘டெல்டா எலக்ட்ரானிக்ஸ்’ உள்ளிட்ட மூன்று முக்கிய தைவான் நிறுவனங்களின் உயர் மட்டக் குழுவினர் இன்று தென் தமிழகத்திற்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மின்னணுவியல், செமிகண்டக்டர், அதிநவீன தானியங்குமயமாக்கல் மற்றும் தளவாடங்கள் ஆகிய துறைகளில் சுமார் 80,000 கோடி ரூபாய் வரையிலான மெகா முதலீட்டுத் திட்டங்கள் இந்த நிறுவனங்களின் பரிசீலனையில் உள்ளன. இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், தென் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40,000 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக, தைவான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். தொழிற்சாலைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை மற்றும் வான்வழிப் போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான சரக்குக் கையாளுதல் வசதிகள் குறித்து இந்தக் குழுவினர் விரிவாக மதிப்பீடு செய்யவுள்ளனர். இந்த முதலீடுகள் இறுதி செய்யப்படும் பட்சத்தில், தென் தமிழகத்தின் பொருளாதார உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
