தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு அமைக்கப்பட்ட நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 19 மற்றும் 22-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளானதால், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள், மின்வெட்டு, கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளில் தனது அரசின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகையில், “சட்டம் ஒழுங்கு தொடர்பாக யார் எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும் நாங்கள் காது கொடுத்து கேட்போம். இது மன்னர் ஆட்சி அல்ல, மனசாட்சி கொண்ட மக்களாட்சி” என்று வலியுறுத்தினார். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து கடந்த ஆட்சியின் மீது குற்றம் சாட்டிய அவர், “போதைப்பொருள் பிரச்னையை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது யார்? தற்போது அதன் விளைவுகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்” என்றார்.
மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்த முதலமைச்சர், “கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை நடைபெற்ற காலம் மலையேறிவிட்டது. மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்” என்று எச்சரித்தார். ஒன்றிய அரசுடன் தேவையில்லாமல் மோதல் போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சியே தங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்தார். மின்வெட்டு பிரச்னை குறித்து பேசியவர், “கடந்த ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகள் மற்றும் சிலரின் வேண்டுமான நடவடிக்கைகளால் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் சரிசெய்து மக்களுக்கு நிவாரணம் அளிப்போம்” என்று உறுதியளித்தார்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது என்று வலியுறுத்திய முதலமைச்சர், “+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை வேண்டும். நீட் தேர்வு எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது” என்றார். சமூக நீதி விவகாரத்தில், தங்கள் அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள் மற்றும் 4 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “அம்பேத்கர் கனவை நிறைவேற்றும் வகையில் பட்டியலின சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
“இந்த ஆட்சி மக்களின் தயவாலும், மனசாட்சி உள்ள கட்சிகளின் ஆதரவாலும் நடைபெறுகிறது. திமுக தயவால் அல்ல. நாங்கள் யாருடைய பி-டீமும் அல்ல; Purely People’s Team” என்று வலியுறுத்தினார். கூட்டத்தொடரின் இறுதியில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “Evils, Evils” என்று பேசியதைச் சுட்டிக்காட்டி, “Devils பேசக்கூடாது” எனக் கூறியவாறு ஜோசப் விஜய் அவரது செய்கையை நகைச்சுவையுடன் செய்து காட்டியது சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிய அரசின் முதல் சட்டசபை அமர்வு, எதிர்கால நடவடிக்கைகளுக்கான தெளிவான சமிக்ஞையை அளித்துள்ளது.
