தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை மின்சாரப் பராமரிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், மின்தடைகளை குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த ஊழியர் தேவை 1,40,635 ஆக உள்ள நிலையில், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 74,174 மட்டுமே. இதனால் சுமார் 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பற்றாக்குறை காரணமாக மின்வாரி பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் மற்றும் புதிய இணைப்புகள் தாமதமாகின்றன.

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இந்தப் பிரச்னையை சமீபத்தில் ஒப்புக்கொண்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், ஓய்வு பெற்ற இன்ஜினியர்கள், ஃபோர்மேன், லைன் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியாளர்களை தற்காலிகமாக பணியமர்த்தி வருகிறது TANGEDCO.

முன்பு 110 கே.வி. துணை மின்நிலையங்களில் பணியாற்றும் ஓய்வு பெற்றோருக்கு நாளொன்றுக்கு ரூ.750 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 33/11 கே.வி. நிலையங்களுக்கு ரூ.500 என்ற அளவில் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. இது பல ஓய்வு பெற்றோரை ஈர்க்காததால், பணியில் ஆர்வம் குறைவாக இருந்தது. இந்தச் சூழலில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மாத சம்பளம் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணியாளர்களின் அடிப்படை நாள் சம்பளமும் ரூ.766லிருந்து ரூ.965 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பி.எஃப்., பாதுகாப்பு உபகரணங்கள், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றைச் சேர்க்கும்போது ஒப்பந்தத் தொழிலாளர்களின் மொத்த சம்பளம் ரூ.1,324 ஆக உயரும். இந்த உயர்வு ஊழியர் பற்றாக்குறையை ஓரளவு போக்கி, மின்சார வழங்கல் தொடர்ச்சியை உறுதி செய்யும் என மின்பகிர்மான கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஓய்வு பெற்ற ஊழியர்களின் அனுபவம் மதிப்புக்குரியது என்றாலும், சில இடங்களில் உடல் திறன் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் வேகம் குறைவாக இருக்கலாம் என்பது வாதம்.

இளம் பொறியாளர்கள் மற்றும் இளைஞர்களை நிரந்தரமாக நியமித்தால், துடிப்பான பணியாற்றுதல் மற்றும் நீண்டகால தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.TANGEDCO-வின் இந்த சம்பள உயர்வு உடனடி நிவாரணம் அளிக்கும் என்றாலும், காலியிடங்களை நிரப்ப நிரந்தர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம். மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில், மனிதவளப் பலம் வலுப்பெற வேண்டியது மிக முக்கியம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version