திருச்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (40). இவர் இன்று காலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டியின் உச்சி மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே மீட்டனர். பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்தப் பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தான் நகை மற்றும் பண விவகாரத்தில் ஏமாற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அவற்றைப் மீட்டுத் தருமாறு கோரி, கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகக் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
