மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதலா காவல் நிலையம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.
https://x.com/ANI/status/2060977248484946043?
திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சண்டிதலா காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க டிஎம்சி தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்கள் காவல் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் டிஎம்சிக்கு எதிராக “திருடன், திருடன்” என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, திடீரென அது வன்முறையாக மாறியது. இந்த தள்ளுமுள்ளு மற்றும் மோதலின் போது, டிஎம்சி எம்பி கல்யாண் பானர்ஜியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கு முந்தைய நாள் தான், டிஎம்சி கட்சியின் மூத்த எம்பியான அபிஷேக் பானர்ஜி மீது தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்தது.
அப்போது அங்கு கூடியிருந்த கும்பல் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகளையும், கற்களையும் வீசி எறிந்ததோடு, அவரை அடிக்கவும் முயன்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“இது பாஜகவினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். சம்பவ இடத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்” என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்புடன் மீட்கப்பட்ட அவர், கொல்கத்தாவில் சிகிச்சை பெற்ற பின், மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தார்.
மறுபுறம், இதே நாளில் சட்டமன்றச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் ஒன்றில் போலி கையெழுத்திட்டதாகக் கூறப்படும் வழக்கில், மேற்கு வங்க சிஐடி (CID) போலீசார் அபிஷேக் பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய பதில் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து டிஎம்சி எம்பிக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் மேற்கு வங்காளத்தில் அரசியல் ரீதியான பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
