விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளாட்சி அதிகாரப் போட்டி வெளிப்படையாக வெடித்தது. குறிப்பாக, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்களான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல், கட்சியின் ஒற்றுமைக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆதரவாளர்களிடையே தனித்தனி அணிகளாக செயல்படும் போக்கு தீவிரமடைந்தது. விசுவநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, மாவட்ட செயலாளர் மாரிச்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் வாய்த்தகராறாகத் தொடங்கிய பிரச்சினை, பின்னர் கடும் மோதலாக மாறியது. அமைச்சர் கீர்த்தனாவை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் சில கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆளும் கட்சியின் நிகழ்ச்சியிலேயே நடந்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதே பகுதியில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஏற்பாடு செய்த மற்றொரு நலத்திட்ட விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார். அங்கு பேசிய அவர், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் மூலமாகவே சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அவரது மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தக் கருத்து கீர்த்தனா ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரே தொகுதியில் பல நிர்வாகிகள் இருக்கும் சூழலில் ஒருவரை மட்டும் சுட்டிக்காட்டி பேசியது அதிகாரப் போட்டியை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. தவெக கட்சி சில வாரங்களுக்கு முன்பு மற்ற கட்சிகளிலிருந்து பல நிர்வாகிகளை இணைத்துக்கொண்ட நிலையில், மாவட்ட அளவில் அதிகார மையங்கள் உருவாகும் போக்கு அதிகரித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சிப் பொறுப்புகள், பதவிகள் மற்றும் தேர்தல் சீட்டுகள் தொடர்பான போட்டி தீவிரமடைந்துள்ளது. சிவகாசி சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல; கட்சியின் எதிர்காலத்தில் பெரிய உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு முன்னோட்டம் என உள்ளூர் தவெகவினர் கருதுகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே பல மாவட்டங்களில் இத்தகைய அதிகாரப் போட்டிகள் எழுந்தால், கட்சித் தலைமை எப்படி கையாளப் போகிறது என அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன. தவெகவின் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே தீவிர விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version