னியார் செய்தி நிறுவன பெண் செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான பி.ஆர். சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பி.ஆர். சுந்தர் மீது அண்மையில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கடந்த மாதம் 1-ஆம் தேதி பி.ஆர். சுந்தரின் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் தன்னை சுமார் 3 மணி நேரம் பூட்டி வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரது மனைவி மங்கையர்கரசியும் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இருவரையும் தீவிரமாகத் தேடி வந்த காவல் துறையினர், பெங்களூரில் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பங்குச்சந்தை மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு

இதனிடையே குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள பி.ஆர். சுந்தர், “சென்னை நுங்கம்பாக்கத்தில் எனது நிறுவனத்திற்குச் சொந்தமான வீட்டைத் தமிழ்நாடு காவல்துறையின் தொழில் நுட்பப்பிரிவு எஸ்பி அன்புச்செழியன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து காலி செய்ய மறுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்தும் பலன் இல்லை.

அந்தச் சொத்தை மீட்க நான் சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றதால், என்னை பழிவாங்கும் நோக்கத்துடனும் சொத்துப் பிரச்சினையைத் திசைதிருப்பவுமே ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் மூலம் என் மீது பொய்யான பாலியல் புகார் புனையப்பட்டுள்ளது. இதற்கும் அரசியல் ரீதியான பின்னணி எதுவுமில்லை. இந்தச் சதியை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சீமான் கண்டனம்

இந்த நிலையில்,  பி.ஆர். சுந்தர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காகச் சகோதரர் பி.ஆர். சுந்தர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்துக் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும்; தனிநபர் பகை தீர்க்க அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடு” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version