அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ‘மரைன் ஒன்’ (Marine One) ஹெலிகாப்டர் தொடர்பாக ஏற்பட்ட விமானப் பாதுகாப்பு நடைமுறை மீறல் குறித்து, அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகேயுள்ள எலிப்ஸ் (Ellipse) பகுதியில் இருந்து மரைன் ஒன் ஹெலிகாப்டர் புறப்பட்டு, மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்துக்கு சென்றது. அங்கிருந்து அதிபர் டிரம்ப் மேற்குக் கடற்கரைப் பயணத்தை தொடங்க இருந்தார்.
ஆனால், ஹெலிகாப்டர் புறப்படும் நேரத்தில் அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் (DCA) வழக்கம்போல் வர்த்தக விமான போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிமுறைகளின்படி, மரைன் ஒன் புறப்படுவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்பே அந்தப் பகுதியிலுள்ள மற்ற அனைத்து விமானங்களின் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட உள்ளதாக மரைன் ஒன் குழு வழங்கிய 3 நிமிட எச்சரிக்கையை, அதே அலைவரிசையில் மற்றொருவர் பேசியதால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி கேட்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், மரைன் ஒன் மற்றும் புறப்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய விமானம் இடையே சில நொடிகள் பாதுகாப்பு இடைவெளி குறைந்தது (Momentary Loss of Separation) தெரியவந்துள்ளது என்று FAA தெரிவித்துள்ளது.
இருப்பினும், FAA விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச 1.5 மைல் கிடைமட்ட இடைவெளி மற்றும் 500 அடி செங்குத்து இடைவெளி ஆபத்தான அளவில் மீறப்படவில்லை என்றும், இரண்டு விமானங்களும் ஒன்றுக்கொன்று அபாயகரமாக நெருங்கவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
“மரைன் ஒன் விமானங்களை உலகின் மிகச் சிறந்த விமானிகள் இயக்குகின்றனர். இந்த சம்பவத்தின் எந்தக் கட்டத்திலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆபத்தில் இருக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தேவையான திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் FAA தெரிவித்துள்ளது.

