தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தங்களின் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய அவர் உதயகுமார், அதிமுக தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தொடர்ந்து முயற்சிப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய்யின் மக்கள் செல்வாக்கு இப்போது சரிந்துவிட்டதா? அல்லது இருக்கும் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அதிமுகவினரைக் கூவி கூவி அழைக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வழியில் வந்த விசுவாசமிக்க தொண்டர்களை, பதவிகளைக் காட்டி விலை பேச முயல்வது அரசியல் நாகரிகம் கிடையாது என்று சாடிய அவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் வரலாற்றில் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும், தற்போதும் அதே நிலைதான் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு விகிதத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், எடப்பாடியார் தலைமையில் அதிமுக 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதை நினைவு கூர்ந்தார். மக்கள் ஆதரவில்லாத கட்சிகள்தான் மற்ற கட்சித் தொண்டர்களைக் கவரப் பார்க்கின்றன என்றும், இந்த வேலையை த.வெ.க நிறுத்திக்கொள்ளாவிட்டால் கடுமையான அரசியல் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version