கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் மக்களை நேரடியாக சென்று சந்திக்காத தவெக தலைவர் விஜய், நாளை சேலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இதற்காக சேலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவுள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 4,998 பேருக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்து கொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றூம் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை ( பிப்.13 ) மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் நடைபெறவுள்ளது. காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும், பொதுமக்களும் நேரில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version