தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், நிலையான அரசு நடத்தும் நோக்கில் பல்வேறு உத்திகளை வகுத்து வருகிறது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சியைத் தொடங்கியது.

முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிராபகர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தவெகவின் சட்டமன்ற பலம் 106 ஆகக் குறைந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக மற்றும் அமமுக உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தபோதிலும், நீண்டகால ஆட்சிக்கு தனி மெஜாரிட்டி அவசியம் என்பதை உணர்ந்துள்ள தவெக தலைமை, இடைத்தேர்தல் மூலம் பலத்தை அதிகரிக்கும் திட்டத்தில் முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக நிர்வாகிகள் கூறுகையில், “வட மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளனர். இதனால் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது” என்றனர். மேலும், திமுகவுக்குள் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தவெக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் நான்கு பேர் ராஜினாமா செய்து தவெகவில் இணைய முன்வந்தால், மொத்தம் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.

இந்த இடைத்தேர்தல்களில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றால், எந்தக் கட்சியின் ஆதரவும் இன்றி தவெக தனி மெஜாரிட்டியுடன் ஐந்தாண்டு ஆட்சியை நடத்த முடியும். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சியை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த உத்தியை தவெக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரும் இந்த அணுகுமுறையை ஆதரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுகள் தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் திமுகவுக்குள் உள்ள அதிருப்தி ஆகியவை தவெகவுக்கு சாதகமாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version