தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நாளை (டிச.18) ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்நிகழ்வை சுற்றி நடந்துள்ள தகவல்கள் பனையூர் வட்டாரத்திலிருந்து லேசாக காற்றில் பரவி வருகின்றன. அவற்றை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 

ஈரோடு மாவட்டம், சரளை பகுதியிலுள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் வியாழக்கிழமையான நாளை (நவ.18) மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று பேச இருக்கிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் பொது வெளியில் முதல்முறையாக மக்களை சந்திக்க இருக்கிறார் விஜய். இதையொட்டி பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள், தொண்டர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து ஏற்பாடுகளும் எவ்வித குறையுமின்றி இருக்க வேண்டும் என்பதற்காக களத்தில் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஈரோடு மண்ணின் மைந்தரான செங்கோட்டையன். அவரது இந்த மெனக்கெடல்களுக்கு பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அதாவது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீதிருந்த அதிருப்தியால் அத்தலைமைக்கு எதிராக செயல்பட்டு, பதவி பறிக்கப்பட்டு கடைசியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வெளியேறினார். தனது MLA பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அங்கு அவருக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதையடுத்து “அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் என்ன மாற்றங்களை, கட்சிக்கு என்ன ஏற்றங்களை தரப்போகிறார் என்பது இனி அவர் செயல்படும் முறையிலிருந்து தான் தெரியவரும்” என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தனர். அதன்படி, இந்த ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி செங்கோட்டையன் மிகுந்த நம்பிக்கையில் உள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடையே அவர் தனது செல்வாக்கை காண்பிப்பதற்கான வாய்ப்பாக உருவாகியுள்ளது. இது அவரது மெனக்கெடலுக்கான முதல் காரணம்.

மேலும், செங்கோட்டையன் இல்லாதது அதிமுகவுக்கு இழப்பே கிடையாது; அவர் துரோகி (பெயரை குறிப்பிடாமல்) என கூறிவரும் அதிமுகவினருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற புள்ளியில் அவருக்கு ஒரு வகையில் அது தன்மான பிரச்சனை வேறு. ஆக, எடப்பாடியார் & கோ சொன்ன வார்த்தைகளை எல்லாம் பொய்ப்பிக்க வேண்டும்; கொங்கு மண்டலத்தில் அதுவும் ஈரோட்டில் தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பதை காண்பிக்க வேண்டும் என்ற முனைப்போடும் வேலை செய்கிறார் செங்கோட்டையன் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மேலும், இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் அவர்களை நீண்ட நேரம் பேச வைக்கவும் அறிவுறுத்தியுள்ளாராம் செங்கோட்டையன். அவரது கடந்த மக்கள் சந்திப்பு பிரச்சார பயண பேச்சுக்கள் அனைத்தும் சற்று ஏறக்குறைய 10 நிமிடங்கள் என்ற அளவிலேயே இருந்து வருகின்றன. இதனால், அவரை பார்க்க வேண்டும், அவரது பேச்சை கேட்க வேண்டும் என்ற ஆவலோடு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அவர் ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறார் என்பதோடு மட்டுமல்லாமல், விஜய்க்கும் தமிழக வெற்றிக்கழகத்தில் அவரது பேச்சுக்கு உரை எழுதுபவர்களுக்கும் பொதுவான மற்றும் அந்தந்த பகுதிகளின் அரசியல் பிரச்சனைகள் குறித்த புரிதல் அவ்வளவுதானா? என்ற விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதையெல்லாம் இந்த மக்கள் சந்திப்பில் மாற்ற வேண்டும்; விஜய்க்காக மட்டுமல்லாமல் தனக்காகவும் வரும் மக்கள் எந்த வகையிலும் ஏமாற்றம் அடையக்கூடாது என்ற வகையில், “நீங்கள் பேசும்போது குறைந்தது 30 நிமிடங்களாவது பேசுங்கள்” என்ற அறிவுரை தோய்ந்த அழுத்தத்தை விஜய்க்கு கொடுத்திருக்கிறாராம் செங்கோட்டையன். மேற்கொண்டு அவர் என்ன பேச வேண்டும் என்பதில் செங்கோட்டையனும் பாயிண்டுகளை கொடுத்துள்ளார் என்கின்றனர் பனையூர் தவெகவாசிகள். மேலும், தமிழக வெற்றிக்கழகம் சார்பாக அறிவிக்கப்படும் சில வருங்கால மக்கள் நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்த ‘அரைமணி நேர அசைன்மென்டை’ விஜய் ஏற்றுக்கொண்டு கச்சிதமாய் செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஈரோடு மக்கள் சந்திப்பு குறித்த மற்றுமொரு முக்கிய தகவலாக, செங்கோட்டையன் அவர்களின் ஏற்பாட்டில் அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் யாரென்ற தகவல்களை அவர் ரகசியமாக வைத்துள்ள நிலையில், ஒருவேளை அவர் கூறியபடி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் யாரேனும் வர இருக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்…

ஈரோடுல ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே… ஒன்னு செங்கோட்டையன்; இன்னொன்னு…

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version