செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாகப் புகார் எழுந்தது.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகேயுள்ள புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கோரியதாக தவெகவின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் கைகலப்பு வரை சென்ற நிலையில், தவெக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்து விஜயகுமாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளது.

சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் உள்ளிட்டோர் புதூர் பகுதியில் செங்கல் சூளை தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் தவெக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்து மாமூல் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 22-ம் தேதி சூளை பகுதிக்கு வந்த தவெக நிர்வாகிகளை சூளை உரிமையாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மடக்கி தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பு முற்றியது.

இதையடுத்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் மீது புகார் அளித்தனர். தவெக தரப்பினரோ, “அந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதை அறிந்து, பர்மிட் இன்றி மண் கொண்டு வரும் லாரிகளை வீடியோ எடுத்து கனிவளத்துறை அதிகாரியிடம் புகார் செய்தோம். அதிகாரி வருகை தந்தபோது, சூளைகளைக் காட்ட நாங்களும் உடன் சென்றோம். அனுமதியின்றி மண் ஏற்றி வந்த இரு லாரிகளை அதிகாரிகள் மடக்கி எச்சரித்தனர். இதனால் வேண்டுமென்றே எங்கள்மீது பழி சுமத்தப்படுகிறது” என விளக்கமளித்தனர்.

இதே விவகாரத்தில் தவெக தரப்பிலும் சூளை உரிமையாளர்கள் மீது மிரட்டல் மற்றும் தாக்குதல் புகார் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் தாலுகா போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கோரிய விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட தவெக தலைமை, விஜயகுமாரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

“அரசு விவகாரங்களில் கட்சியினர் தலையிடக் கூடாது. மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விஷயங்களில் ஆய்வு அல்லது தலையீடு செய்யக் கூடாது. கட்சிப் பெயரைப் பயன்படுத்தி தன்னிச்சையாக அதிகாரம் செலுத்துவதை அனுமதிக்க மாட்டோம்” என தவெக தலைமை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல், கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்று கட்சி ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இச்சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version