ஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

காவிரி உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில் பெண்களைப் பற்றி வக்கிரமாகவும் அவதூறாகவும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் நடந்த அதிரடி

இந்த வழக்கின் அடிப்படையில், இன்று விடியற்காலையில் சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்ற தஞ்சாவூர் தனிப்படை போலீஸார், அவரை கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் ஒரு வழியாக  காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்ட உதயநிதியை,  சாலை மார்க்கமாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சை காவல் நிலையத்தில் போலீஸ் குவிப்பு

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அரசு தரப்பிலும் உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  வாகனத்தில் அழைத்து வரப்பட்ட உதயநிதி 2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டனர்.

கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்த நிலையில், விசாரணைக்காக தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியானது. உதயநிதி மீது தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. திமுகவினர் அதிகளவு கூடாத வண்ணம் தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

திடீர் யூ டர்ன்… விசாரணை இடம் மாற்றம்

இந்த நிலையில், உதயநிதியை அழைத்து வந்த வாகனம், தஞ்சாவூர் நகர எல்லைக்குள் நுழையாமல் திடீரென யூ-டர்ன் அடித்துச் செங்கிப்பட்டி காவல் நிலையத்தை நோக்கித் திருப்பி விடப்பட்டது. ஏற்கனவே தஞ்சை தெற்கு மற்றும் கிழக்குக் காவல் நிலையங்கள் முன்பாக திரளான திமுக தொண்டர்கள் கூடியிருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போலீஸார் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.

செங்கிப்பட்டி காவல் நிலையம் வந்தடைந்ததும், “தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில்தான் என் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது, அங்குதான் விசாரணைக்கு வருவேன்” எனக் கூறி உதயநிதி வாகனத்தை விட்டு இறங்க மறுத்ததால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

பின்னர் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் செல்லச் சம்மதம் தெரிவித்தார். தகவல் அறிந்து திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாகச் செங்கிப்பட்டிக்கு விரைந்து வந்து உதயநிதியைச் சந்தித்தனர். தற்போது செங்கிப்பட்டி காவல் நிலையத்தை நூற்றுக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி வருவதால், அப்பகுதியில் பெருமளவில் ஆயுதப்படைப் போலீஸார் குவிக்கப்பட்டுப் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

உதயநிதி ஸ்டாலிடம், தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில், காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version