பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழுமையான தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், விவசாய சமூகத்தில் பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சித்து வருகின்றனர். பல்வேறு விவசாய அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமடையும் என அவர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த அளவு தள்ளுபடி போதாது என்பது அவர்களின் முக்கிய வாதம்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட அவர், “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றியிருக்கிறது த.வெ.க அரசு” எனக் குற்றம் சாட்டினார். தேர்தல் பிரச்சாரத்தில் “5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி” என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், “200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்” என்ற வாக்குறுதியை நினைவுகூர்ந்த அவர், “500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM செய்கிறார்கள்” எனக் கூறினார். “இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவில் தயாராக இருக்கணுமா?” என CM ஜோசப் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயம் முக்கிய பொருளாதார அடிப்படையாக இருக்கும் நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்கள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து விலகிச் செல்லும் இந்த முடிவு, அரசுக்கு அரசியல் ரீதியாக சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். விவசாய சங்கங்கள் மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
